Friday, March 2, 2012

ராஜராஜனின் மகள்கள் மூவர் பெயர்கள்

சோழப் பேரரசின் இணையற்ற மாமன்னராக விளங்கித் தஞ்சாவூரில் தாம் எடுப்பித்த மாபெரும் கற்றளியாம் இராஜராஜீசுவரத்தால் தமிழ்நாட்டுக் கலை வரலாற்றில் சிறப்புக்குரியதோர் இடத்தைப் பெற்றுள்ள பெருவேந்தர் முதலாம் இராஜராஜருக்கு மூன்று பெண்கள் இருந்தனர். அம்மூவருள் தமிழ்நாட்டு மக்களுக்கு நன்கு அறிமுகமான பெயர் குந்தவை. கும்பகோணத்திற்கு அருகிலுள்ள திருவலஞ்சுழிக் கோயிலில் இராஜராஜரின் பட்டத்தரசியான உலகமாதேவி எழுப்பிய சேத்ரபாலர் கோயில் உள்ளது. அக்கோயில் இறைவனுக்குப் பொன்னும் பொன்னாலான நகைகளும் குந்தவை வழங்கியதாக அக்கோயிலில் உள்ள இராஜராஜரின் 25ஆம் ஆட்சியாண்டுக் கல்வெட்டுச் சொல்கிறது. குந்தவையைக் குறிப்பிடும்போது, 'ஸ்ரீராஜராஜதேவர் திருமகளார் விமலாதித்ததேவர் மகாதேவியார் ஸ்ரீகுந்தவை நங்கையார்' என்று அவருடைய தந்தையார் பெயரையும் மணவாளர் பெயரையும் கூறிச் சிறப்பிக்கும் கல்வெட்டு இராஜராஜரின் மற்றொரு மகளையும் வெளிச்சத்திற்குக் கொணர்கிறது.

மாதேவடிகளார் என்றும் நங்கை மாதேவடிகளார் என்றும் அறியப்படும் இராஜராஜரின் இந்தப் பெண்ணை, 'நடுவில் பெண் பிள்ளை', 'நடுவில் பிள்ளையார்' என்று அறிமுகப்படுத்துவதன் வழி, இராஜராஜரின் மூன்று பெண்களுள் இவர் இடைப்பட்டவர் என்று தெளிவுபடுத்தும் இக்கல்வெட்டு, சேத்ரபாலருக்கு மாதேவடிகள் தந்த நகைகளைச் சுட்டுமிடத்து, 'ஸ்ரீராஜராஜ தேவர்க்கு ஆடியருள பிரசாதம் பெற்ற பொன்னில்' அவர் அவ்வணிகலன்களைச் செய்தளித்ததாகக் கூறுகிறது.

Original Source Article:
http://varalaaru.com/Default.asp?articleid=1084
All credit to author of original article. No copyright infringement intended.